“அகீதா” என்ற அரபுப் சொல்லுக்கு உடன்படிக்கை- வாக்குறுதி போன்ற
பொருள்கள் உண்டு. “அக்த்” என்ற அறபுச் செல்லிருந்து பெறப்பட்டதே அகீதா என்ற சொல்லாகும். இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை கோட்பாடுகளை “அகீதா” என்ற பொருளில் இஸ்லாமிய அறிஞர்கள் அழைப்பார்கள். ஒரு கட்டிடத்தின் உறுதியும் பெருமதியும் அதன் அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுவது போல இஸ்லாத்தில் இபாதத்துகளும் ஏனைய காரியங்களின் தகுதியும் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை கோட்பாடுகளில் ஒருவர் கொண்டிருக்கும் (ஈமான்) உறுதியைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது.
وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاء مَّنثُورًا
‘அவர்கள் செய்த அமல்களின் பக்கமாக நாம் முன்னோக்கினோம். (அவை பயனற்றதாக இருந்ததால்) அதனை பரத்தப்பட்ட பஞ்சுகளாக மாற்றினோம்”. (25: 23)
மனிதன் தன்னைப் படைத்த ஏக இறைவனை எப்படியெல்லாம் தனிமைப்படுத்துவதாலும் ஓர்மை படுத்துவதாலும் இறைவனின் உரிமைகள் பாதுகாக்கப்படுமோ அவ்வாறு இறைவனை ஒருமைப்படுத்துவதையே “அகீதா” கோட்பாடு வேண்டி நிற்கிறது. இதையே “தவ்ஹீத்” (ஏகத்துவம்) என்று அழைக்கிறௌம். இந்த “தவ்ஹீத்” எனும் ஓரிறைக்கொள்கையை ஏற்று ஈமான் கொண்டு வாழ்பவர்களையே முஸ்லிம்கள் என்று இஸ்லாம் அழைக்கிறது.
ஆயினும்! இன்றைய உலகின் விவசாயிகள் முதல் பாராளுமன்ற அமைச்சர்கள் வரை, இலக்கியவாதிகள் முதல் ஆய்வாளர்கள் வரை, கல்லூரி மாணவர்கள் முதல் பட்டதாரிகள் வரை என பல் வேறுபட்ட நிலையில் உள்ள முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கையான (அகீதா) கோட்பாட்டில் தவறிழைத்தவர்களாகவே இருக்கின்றனர்.
இவர்களை சீரமைப்பதற்காக தோற்றம் பெற்ற இஸ்லாமிய அமைப்புக்கள் தமது பணியில் கணிசமான அளவு பங்களிப்புச் செய்திருந்தாலும் இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கையான (அகீதா) கோட்பாட்டில் சமூகம் வெற்றி கண்டுவிட்டது என்று அவைகளால் சொல்ல முடியவில்லை என்பதே உண்மை. இஸ்லாத்தின் முதுகெலும்பாக இருக்கும் அடிப்படை அம்சங்களில் ஒன்றான ‘இறை நம்பிக்கை” பற்றிய கோட்பாட்டில் ‘இறை நம்பிக்கையின் அடிப்படைகள்”என்ன? ஏகத்துவத்தின் இலக்கணங்கள் என்ன? அவனது திருநாமங்கள் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம் என்ன ? இன்றைய சமூகத்தில் நிலவி வருகின்ற ‘இறை நம்பிக்கை’ க்கு எதிரான செயல்கள் என்ன? என்பன போன்ற அடிப்படையான அம்சங்கள் பற்றி இச்சமூகம் சரியாக அறிந்து வைத்துள்ளதா என்பது மனதை உருத்தும் மாபெரும் கேள்விக்கணையாக இருந்து வருகிறது.
எனவே! இஸ்லாத்தின் முதுகெலும்பாக இருக்கும் இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கையான (அகீதா) கோட்பாட்டில்!….
எனது நிலை எவ்வாறு அமைந்துள்ளது?
அதில் நான் தெளிவாக அறிந்துள்ள விடயங்கள் எவை?
எந்தவிதமான நற்செயல்களானாலும் அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெற அகீதா சரியாக அமையப் பெற்றிருக்க வேண்டுமே! அதில் குறைந்த பட்சம் எனது குடும்பத்தை சரியாக அழைத்துச் செல்வதற்கான போதிய அறிவூ என்னிடத்தில் இருக்கின்றதா?
குறைந்தபட்சம், எனது வாழ்வையும் எனது இபாதத்துக்களையூம் சரியாக அமைத்துச் கொள்வதற்கான அறிவாவது என்னிடத்தில் இருக்கின்றதா? என்பதனை இன்றைய ஒவ்வொரு முஸ்லீமும் சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளனர்.
சமுதாய ஒற்றுமை, சமுதாய எழுச்சி யாவும் சமுதாயத்தின் அடித்தளத்தை கட்டியெழுப்புவதிலேயே தங்கியூள்ளது. இஸ்லாமிய சமுதாயத்தின் அடித்தளம் நாம் சுமந்துள்ள அடிப்படைக் கொள்கைதான் என்றால் மறுப்பவர்கள் யாரும் இருக்க முடியாது. எனவே எமது ஈருலக வெற்றி அடிப்படைக் கொள்கையைப் பற்றிப் பிடிப்பதில்தான் உள்ளது என்பதை உணர்ந்து இத்தொடரை நிதானமாக கருத்தூன்றிப் படிக்குமாறு அன்பாய் வேண்டுகிறேன்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘ஒருவருக்கு அல்லாஹ் நன்மையை நாடினால் அவரை (மார்க்கத்தில்) விளக்கமுடையவராக ஆக்கி விடுகிறான்’ மேலும் ‘மார்க்க ஞானம் என்பது கற்றுக் கொள்வதன் மூலம்தான் கிடைக்கும்’ (புகாரி : 67).
يُؤتِي الْحِكْمَةَ مَن يَشَاء وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلاَّ أُوْلُواْ الأَلْبَابِ
தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்;. (அறிவு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார். எனினும் நல்லறிவுடையோரைத் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. (அல் குர்ஆன் 2:269).
நம்மில் சிலரிடம் மார்க்கத்தைப் படிக்க வேண்டப்படுகின்ற போதெல்லாம்; நேரமில்லை என்பதையே வழக்கமான பதிலாகக் கொண்டிருக்கிறார்கள்.இவர்களிடம் “என்ன சினிமா பார்க்கிறீர்களாமே!….” என்று கேட்டால் சும்மா டைம் பாஸ்த்தான் (Time Passing) என்பார்கள். மார்க்கம் படிக்க அழைத்தால் “எங்கப்பா டைம் (Time)” என்பார்கள். பார்த்தீர்களா?….எவ்வளவு முரண்பாடான பதில். ”பருவத்தை விட்டால் பயிர்கள் பதராகிவிடும்” என்பார்கள், அது போல் தான் நேரமும் என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ளட்டும்.
“இரண்டு பாக்கியங்களை பெரும்பாலான மக்கள் அலட்சியம் செய்கின்றனர். அவைத்தான் ஆரோக்கியமும் நேரமுமாகும்”. என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி : 6412).
ஈமான்(இறை நம்பிக்கை)
ஈமான் எனும் பதம் மொழி ரீதியாக நம்பிக்கை எனும் கருத்தைக் கொண்டுள்ளது. ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் அதன் கருத்தாவது: நாவினால் விசுவாசப் பிரமாணத்தை மொழிந்து, உள்ளத்தால் பூரணமாக நம்பி, உறுப்புக்களால் அதன்படி செயற்படுவதாகும்.
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلاَةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ
“நிச்சயமாக முஃமின்கள் என்போர் அல்லாஹ் (என்று) நினைவூட்டப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுநடுங்கும். அவனது அத்தாட்சிகள் அவர்களிடம் ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களது இறை நம்பிக்கை (ஈமான்) மென்மேலும் அதிகரிக்கும். அவர்கள் தமது இரட்சகன் மீது (உறுதியாக)நம்பிக்கை வைப்பார்கள். தொழுகையையும் நிலை நிறுத்துவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நல் வழியில் செலவும் செய்வார்கள். இவர்கள் தாம் முஃமின்கள் (ஈமான் கொண்டவர்கள்). (8;: 2-4).
எமது ஆத்மா இறைவனுடன் சிறந்ததொரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்ற விதத்திலும், மறுமையில் நாம் நிச்சயமாக நமது இறைவனைச் சந்திப்போம் என்பதில் அசையாத அழுத்தமான நம்பிக்கை ஏற்படுத்துகின்ற வகையிலும், மறுமையில் இறைவனைச் சந்திக்கும் போது நாம் இவ்வுலகில் செய்த எல்லாச் செயல்களுக்கும் அவனிடத்தில் உரிய கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற உறுதியை உள்ளத்தில் ஏற்படுத்துகின்ற விதத்திலும் ஈமானை நம்முள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த நம்பிக்கை நமது உயிருடன் ஊடுருவி நமது சொல், செயல் அனைத்திலும் வெளிப்பட வேண்டும்.
ஈமானின் அடிப்படைகள்- 06
அல்லாஹ்வை நம்புவது.
அவனுடைய மலக்குகளை (வானவார்களை) நம்புவது.
அவனுடைய வேதங்களை நம்புவது.
அவனுடைய தூதார்களை நம்புவது.
மறுமையை நம்புவது.
விதியின் (அவனுடைய நாட்டப்) படியே நன்மை, தீமை அனைத்தும் எற்படுவதை நம்புவது.
நாங்கள் ஒரு நாள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது வெண்ணிற ஆடை அணிந்த அடர் கருப்பு நிறத்தையுடைய ஒரு மனிதர் வந்தார்.அவர் நபிகளாரின் முழங்காலோடு தன் முழங்காலை சேர்த்து அமர்ந்து முஹம்மதே! ஈமான் (இறை நம்பிக்கை)பற்றி எனக்கு அறிவியுங்கள் என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ்வை நம்புவது, அவனுடைய மலக்குகளை (வானவார்களை) நம்புவது, அவனுடைய வேதங்களை நம்புவது, அவனுடைய தூதார்களை நம்புவது, மறுமையை நம்புவது, அவனுடைய நாட்டப் படியே நன்மை, தீமை அனைத்தும் ஏற்படுவதை நம்புவதுமாகும்” என்றார்கள். பிறகு அம்மனிதர் சென்று விட்டார். நீண்ட நேரம் கழித்து, நபி(ஸல்) அவர்கள் என்னிடம் உமரே! வந்தவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார்கள். அல்லாஹ்வும் அவன் தூதருமே அறிந்தவர்கள் என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அவர் தான் ஜிப்ரீல், உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை கற்றுத் தர வந்தார்” என பதிளலித்தார்கள். (முஸ்லிம்:-09)



0 கருத்துகள்::
Post a Comment